
எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை இலியானா சுசாந்த் மரணம் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கடும் உணர்வு மூட்டத்தில் இந்த நாளை கடந்தேன். பல மணி நேரங்கள் தொடர்ந்து அழுதேன். எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இந்த இழப்பு என்னை மிகவும் ஆழமாகப் பாதித்து விட்டது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும், என்னால் ஆழ்ந்த இரங்கலை மட்டுமே தெரிவிக்க முடியும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.
நான் சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. நாம் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறோம். அதாவது மனிதர்களாகிய நாம் அனைவருமே, நம் உணர்வுகளை மறைக்கவே விரும்புகிறோம் ஆனால் சில சமயம் அவை இதயத்திலிருந்து அழுகையாக வெடித்து வெளியே வந்துவிடுகின்றன.
நாம் நன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறோம் ஆனால் 'நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.. ப்ளீஸ் காப்பாற்றுங்கள்' என்று அலறவே நாம் ஆசைப்படுகிறோம். உள்ளே நம்மைத் தின்று கொண்டிருக்கும் வலியை மறைத்து புன்னகை செய்கிறோம். அதை யாரும் பார்க்காத போது சுக்குநூறாக உடைந்து நொறுங்கிப் போகிறோம்..

நாம் மனிதர்கள்.. நாம் தோற்றுப் போனவர்கள். சரியாக இல்லாமல் இருப்பது ஒன்றும் தவறல்ல. ஆனால் அப்படியே இருந்துவிடுவதுதான் தவறு. உதவி கேட்பது பலவீனம் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் தனி நபர் அல்ல. எனக்கு அந்த உணர்வு நன்றாகவே புரியும்.. நான் இங்கே பிரசங்கம் செய்ய வரவில்லை..
உங்கள் அனைவரிடமும் நான் கேட்பது தயவுசெய்து அன்போடு இருங்கள் என்பது தான். இந்த உலகுக்கு உங்கள் அன்பு அதிகமாக தேவை.. உங்கள் அதீத இரக்கமும், அதீத அன்பும் தேவை. உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் அன்போடு இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.