ilayaraaja copywright issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Advertisment

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இந்த நிலையில் எக்கோ நிறுவனத்தின் மனு தொடர்பான விசாரணை நீதிபகள் மாகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா?. இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 1970, 80, 90களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையைவரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.