/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/46_52.jpg)
தென்னிந்தியத்திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளித்தது. இதையடுத்து புகார் குறித்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனக் கூறி கடந்த 2022-ம் ஆண்டுபோலீசாருக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம், விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு, நீதிமன்ற தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் வழக்கு விசாரணையை முடிக்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்த நிலையில், டிசம்பர் 12 ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகக் கூறி, அது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதை மறுத்த இளவரசு தரப்பு, டிசம்பர் 13 ஆம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகத்தெரிவித்து
சிசிடிவி காட்சிகள் போலியானவை எனக்கூறியது.
இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி , “நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிசம்பர் 12 ஆம் தேதி நீங்கள் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணையை இன்று (30.01.2024) ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் நிலையத்தில் ஆஜரானது தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இளவரசு புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டி பஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்’.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)