
YSR ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சீனு ராமசாமி இயக்க நாயகனாக மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் முதல்முறையாக இணைந்து இசையமைகின்றனர். மேலும் தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியுடன் மீண்டும் இணைகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் பேசும்போது....
"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என் கண்முன்னால் தெரிவதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பத்மவிபூசன் இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே படத்தில் இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை, அதுவும் அது என் படத்தில் நடப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக, இந்த கூட்டணி தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற அரிய பொக்கிஷங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். YSR ஃபிலிம்ஸ் முதல் தயாரிப்பான 'ப்யார் பிரேமா காதல்' கடந்த ஆண்டு இதே நாளில் தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.