இசைஞானி இளையராஜா தன் பாடல்களுக்கு காப்புரிமை கோரிய வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."நான் 2014ஆம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கின் படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும். நான் 2010ஆம் ஆண்டு 'எகோ' நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் கொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது. அதில் நீதியரசர் 'எகோ' நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடலின் உரிமை மீதான வழக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு சில செய்தி நிறுவனங்கள் 'இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து' என்றும், 'இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி' என்றும் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகின்றனர். நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவ்வாறு தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும். ஏற்கனவே தவறான செய்தி வெளியிட்டவர்கள் இந்த மறுப்பையும் வெளியிட கோருகிறேன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இளையராஜா.