நான்கு தசாப்தங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா, கடைசியாக தமிழில் வெளியான ஜமா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதையடுத்து விடுதலை 2 படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் ‘ட்ரூலி லிவ் இன்’ என்ற இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் தனது பின்னணி இசைக்காக மட்டும் ‘இளையராஜா பி.ஜி.எம்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார்.
கடந்த மே மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தருவதாக இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது மற்ற படங்களுக்கான இசையமைப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததோடு ஒரு சிம்பொனியை எழுதிவிட்டதாக கூறினார். அதோடு அந்த சிம்பொனியை 35 நாட்களில் எழுதிவிட்டதாக சந்தோஷத்துடன் ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இளையராஜா தனது சிம்பொனி வெளியிடும் தேதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஒரு இந்தியரின் முதல் முழு சிம்பொனி என்று குறிப்பிட்டதோடு ‘இளையராஜா சிம்பொனி -1’ அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று(26.01.2025) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், “லண்டனில் இந்த சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்ததாகவும் இதை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.