ADVERTISEMENT

"திரை உலகமோ, அரசோ சிவாஜிக்கு எந்த மரியாதையும் செய்யவில்லை; அதை செய்தது நான் மட்டும்தான்" - இளையராஜா பெருமிதம்

03:48 PM Dec 19, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் பிதாமகனாகப் போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்றவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "ஒரு முறை அவருடன் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதுவரை வெளியில் யாருக்கும் தெரியாத நிகழ்ச்சி அது. அண்ணனுக்கு கலையுலகம் மரியாதை செய்ய வேண்டும் என்று திரையுலகைச் சார்ந்தவர்கள் பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லாரிடமும் வசூல் பண்ணி முடித்துவிட்டு இயக்குநர் முத்துராமன் என்னிடம், சிவாஜி அண்ணனை மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்து பேசினார். ரஜினி சார் இவ்வளவு கொடுத்திருக்காரு, கமல் சார் இவ்வளவு கொடுத்திருக்காரு. நீங்க இவ்வளவு கொடுத்தீங்கனா நல்லாயிருக்கும் என நிதி கேட்டார். மொத்தம் எவ்வளவு தொகை வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வசூலைச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு தொகை சொன்னார். மேலும் குதிரையில் இருப்பதுபோல ஒரு சிவாஜி சிலையை வெள்ளியில் செய்து சிவாஜிக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

மக்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு அரிசியிலும் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்வதைப் போல நடிகர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்களோ நீங்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி கணேசன் என்கிற பெயர் இருக்கிறது. அதில் அவர் பெயர்தான் இருக்கிறதே தவிர உங்களுடைய பெயர் இல்லவே இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் அண்ணனுக்கு கொடுக்கிற பரிசில் வேறு யாருடைய பெயரும் வரக்கூடாது. அந்த மொத்தப் பணத்தையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி நானே கொடுத்துவிட்டேன். அதை இங்கே கூறுவது பெருமை என்னும் நோக்கத்திற்காக அல்ல. இது அண்ணனுக்கும் தெரியும். கமலா அம்மாவுக்கும்தான் தெரியும்.

சிவாஜி அண்ணன் அந்தப் பரிசு சிலையை வாங்கிக் கொண்டு கமலா அம்மாவிடம், நாம் யாரை மறந்தாலும் மறந்துவிடலாம். ஆனால் இளையராஜாவை மட்டும் மறக்கக்கூடாது என்றார். அந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது என்று யோசித்துப் பாருங்கள். அவர் பெயரைத் தவிர யார் பெயரும் இருக்கக்கூடாது என்று நான் சொன்னது அவர் மீது கொண்டிருக்கும் நேசத்தை வெளிப்படுத்தும் வகைதானே தவிர வேறு எதற்கும் சொல்லவில்லை. இந்த நிகழ்வு வெளியில் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. " என்று கண்கலங்கிய படி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிவாஜிக்கு செய்ய வேண்டிய மரியாதையை இந்த சினிமா உலகம் செய்யவில்லை. அரசும் செய்யவில்லை. யாரும் செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்துவிட்டார் என்றால் அது இளையராஜா ஒருவன்தான்" எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT