
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் மற்றும் எம்.பி.யான இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், "மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே, உங்களை வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
முக்கியமாக நான் சொல்ல நினைப்பது 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்று வள்ளுவன் சொல்வதைப் போல, அம்மாவுக்குத் தான் நீங்கள் அமைச்சரானது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதனை வள்ளுவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அது நிஜமாகவே நடக்கும் பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். உங்கள் அம்மா மகிழ்வதை நான் நினைத்துப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன். இந்த அமைச்சர் பதவியின் மூலம், நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
நீங்கள் இறங்கிட்டீங்க; களத்தில் இறங்கிடீங்க; அரசியலில் வந்துட்டீங்க. அதனால் அமைச்சர் பதவி ஏற்றபிறகு பொறுப்பு அதிகமாகுது. அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்றி விடுவீர்கள் என நான் நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.