Skip to main content

கல்லூரி மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்தும் இளையராஜா

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
ilaiyaraja

 

 

இசைஞானி இளையராஜா அண்மையில் எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள்  கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர். அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து  இருக்கிறார். இந்த 9 பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஜெயகாந்தன் கேட்ட கேள்வி பளார் பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது!" - இளையராஜா பகிர்ந்த நிகழ்வு  

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பதில்களினூடே பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அப்போது ஒரு மாணவி எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்குமிடையிலான உறவு குறித்து பகிருமாறு கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியடைந்த இளையராஜா, தான் திரையுலகத்துக்கு வருவதற்கு முன்பு ஜெயகாந்தனை சந்தித்த நிகழ்வொன்றை பகிர்ந்தார். 
 

ilaiyaraja with jayakanthan

 

 

"எங்க பாவலர் அண்ணன் ட்ரூப்ல இருந்து நானும் பாஸ்கர் அண்ணனும் வெளியே வந்து சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி பண்ணிக்கிட்டுருந்தோம். அப்போது ஒரு நாள், நான், பாஸ்கர் அண்ணன், இயக்குனர் பாரதிராஜா மூனு பேரும் சேர்ந்து எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்கப் போலாம்னு கிளம்புனோம். அவரிடம் சினிமா வாய்ப்புக்கு உதவச் சொல்லி கேட்கலாம்னு திட்டம். அப்போது நுங்கம்பாக்கத்தில் அவரது வீடு. நேரா அங்க போயி நின்னோம். எங்களை முன்பே அவர் அறிவார். 'வாங்க தோழர்'னு கூப்பிட்டு, 'என்ன தோழர் விஷயம்?'னு கேட்டார். நாங்க அவரை சந்திக்கப் போனதால், 'சரி சொல்லி வைப்போமே'னு "தோழர், நாங்க அண்ணன் ட்ரூப்ல இருந்து வெளில வந்துட்டோம். சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவீங்கன்னு உங்களை நம்பித்தான் வெளிய வந்தோம்"னு சொன்னோம். அப்படி சொன்னா முக்கியத்துவம் கொடுத்து உதவுவார்னு நினைச்சோம். ஆனா அவர், நாங்க இப்படி சொன்னதும் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாகிவிட்டார். எதுவுமே பேசல. சுத்தமா அமைதியாகிட்டார். எங்களுக்கு ஒன்னுமே புரியல. 'எதுவும் தப்பா பேசிட்டோமோ'னு குழப்பத்தில் இருந்தோம். திடீர்னு சத்தமா, கோபமா, "என்னை கேட்காமல்... என் அனுமதியில்லாமல்... நீங்கள் எப்படி என்னை நம்பலாம்? எப்படி நீங்கள் என்னை நம்பி வெளியே வரலாம்?"னு அவரோட சிம்மக் குரலில் கேக்குறார். எங்களுக்கு அப்படியே காது அடைச்சிருச்சு. அவர் கேட்ட விதம் எங்கள 'பளார் பளார்'னு அறைஞ்ச மாதிரி இருந்தது. அவர் கோபமானதும் என்ன பண்றதுன்னு தெரியாம ஏதோ சொல்லிட்டு வெளியே வந்துட்டோம். வெளியே வந்து பாஸ்கரும் பாரதிராஜாவும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. "என்னயா இது, இவரெல்லாம் என்ன கம்யூனிஸ்டு? இவரை நம்பி வந்தோம்னு சொல்றோம். ஒரு ஆறுதல், நம்பிக்கை சொல்லாம, இப்படி கோபப்படுறாரு. வெளியில மட்டும் தொழிலாளி வர்க்கம், ஏகாதிபத்யம்னு பேசுறாரு?"ன்னு ரெண்டு பேரும் கிண்டல் பண்ணுனாங்க. நான் சொன்னேன், "அப்படியில்லப்பா, 'நீங்க ஏன் என்னை நம்பி வந்தீங்க? உன்னை நம்பி நீ வந்துருக்கணும்'னு சொல்றாருல? அவர்தான் ஜெயகாந்தன்” என்று சொன்னேன். அப்போதிருந்தே அவரை என் குருவாக ஏற்றேன். பின்னாடி நாங்க நண்பர்களாகிட்டோம்".
 

இவ்வாறு மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான தன் நினைவை பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜெயகாந்தன், எழுத்துலகில் அரசராகத் திகழ்ந்தவர். ஞானச்செருக்கு கொண்டவர். அவரது கோபம் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்றது. இளையராஜாவின் இசைஞானமும் கோபமும் அனைவரும் அறிந்ததே. இந்த இருவருக்குள் இப்படி ஒரு நட்பு இருந்ததை அறிந்த இளம் தலைமுறை மாணவிகள் மகிழ்ந்தனர். 


 

Next Story

"லட்ச லட்சமாக சம்பாரித்தேன், என் தாய் கேட்டதோ..." - இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு

Published on 19/03/2019 | Edited on 24/03/2019

இசைஞானி இளையராஜா சமீபகாலமாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மாணவ மாணவிகளிடம் இசையின் முக்கியத்துவத்தை பற்றியும், அதன் வல்லமை பற்றியும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் எடுத்துரைக்கிறார். மாணவர்களிடம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கட்டாயமாக வலியுறுத்துகிறார். 
 

illayaraja

 

 

அந்த வகையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இளையராஜாவிடம் உங்கள் அம்மாவின் சிறந்த பண்பாக எதை சொல்வீர்கள் என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா,  “என் தாயை போல வேறு எந்த தாயும் இல்லை. நானும் என் அண்ணனும் சென்னை கிளம்ப வேண்டும் என முடிவெடுத்தோம். அம்மாவிடம் சென்னை செல்வதற்கு பணம் தாருங்கள் என்று கேட்டோம். நாங்கள் சென்னை கிளம்புவதற்காக எங்கள் அம்மா வீட்டிலிருந்த விலை உயர்ந்த ரேடியோ பெட்டியை விற்றார்.  ரூ.800 விலையுள்ள ரேடியோ பெட்டியை வெறும் ரூ. 400க்கு விற்று, எங்களிடம் அந்த ரூ. 400 பணத்தையும் கொடுத்தார். அந்த சமயத்தில் வீட்டில் காசு பற்றாக்குறை இருந்தது. ஆனாலும் அவர் ரூ. 400 இல் தனக்கென பணம் எடுத்துகொண்டு எங்களிடம் தரவில்லை. முழு பணத்தையும் கொடுத்துவிட்டு, இது போதுமா? என்று எங்களிடம் கேட்டார். நாங்களும் அவரிடம் ஐம்பது ரூபாய் கூட அதிலிருந்து எடுத்துக் கொடுக்காமல், அந்த பணத்தை முழுதாக வாங்கி வந்துவிட்டோம். அவருக்கும் எங்களிடம் பணம் கேட்க வேண்டும் என்கிற உணர்வு இல்லை. இந்த பண்பை எந்த கல்லூரி கொடுத்துவிடும்! இதுதான் பண்பு. இதுதான் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அது என் அம்மாவிடம் நிறையவே இருந்தது.


அப்படிப்பட்ட தாயை என் மனைவி கவனித்துகொண்டிருந்தபோதும், என் அம்மாவிற்காக லட்ச லட்சமாக சம்பாதித்துகொண்டிருந்த நேரத்தில்கூட அவருக்காக நான் சின்ன நகையோ, நல்லப் புடவையோ எதையுமே எடுத்துக் கொடுக்கவில்லை. அவரும் என்னிடம் கேட்டதுக்கூட இல்லை. 


ஒருமுறை என் அம்மா என்னிடம் வந்து கொஞ்சம் பணம் வேண்டுமேப்பா என்று தயங்கி தயங்கி கேட்டார். நான்கூட பெரிய தொகையாக கேட்க போகிறார்கள் போல என்று மனதிற்குள் நினைத்துகொண்டிருந்தேன். பின்னர், அவர் அவ்வளவு தயங்கி கேட்ட பணம் ரூ.2000 தான். ஆனால், நான் வேண்டும் என்றே அவரிடம் அவ்வளவா என்று பயமுறுத்தினேன். அம்மா உடனே நிறைய கேட்டுவிட்டேனாப்பா என்றார். இல்ல அம்மா என்று சிரித்துகொண்டே பணத்தை கொடுத்தேன். இதுபோல ஒரே ஒருமுறைதான் என்னிடம் அவர் கேட்டிருக்கிறார்.


இதனால் என் மனைவியை குறித்து அவர் ஒருமுறைக்கூட குறை சொல்லியதில்லை. நான் இருக்கும்போது எதற்கு உன் மனைவி வீட்டை பார்த்துக்கொள்கிறார். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று ஒருமுறை கூட சொல்லியதில்லை. அந்த பண்புதான் என் அம்மா. என் அம்மா உயிருடன் இருந்தபோதே, ஒரு படத்தில் அம்மா மறைந்ததற்கு டியூன் கேட்டார்கள். நான்  ‘உன்னபோல ஆத்தா, என்ன பெத்துபோட்டா’ என்ற பாடலுக்கு இசை அமைத்து, ரெகார்ட் செய்து அவர் உயிருடன் இருக்கும்போதே என் போட்டுக்காட்டினேன். அந்த பாடலை கேட்டு அவர் கண்ணில் கண்ணீராக கொட்டியது. இந்த மாதிரியான தாய் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது” என்றார்.


இறுதியாக கல்லூரியில் சிறப்புரையை கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளை பார்த்து, “ மாணவிகளே நீங்கள் அனைவருமே எனக்கு தாய்தான். நீங்களும் ஒருநாள் தாயாக போகிறீர்கள் அல்லவா? ” என்று கூறினார்.