நேற்று மாலை சென்னையில் இளையராஜாவின் 76வது பிறந்தநாளையொட்டி பிரமாண்டமான இசை விழா நடைபெற்றது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர்.
நேற்று இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள், வாழ்த்துச் சொன்னார்கள். நேரிலும் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.இன்று மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், உங்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்புக் காத்திருக்கிறது. அங்கே வந்தால் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். தெரிந்துகொள்வீர்கள். எல்லோருக்கும் நன்றி” என்றார்.
நிகழ்ச்சிக்கு சென்ற பலரும் அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ஆவலாக காத்திருந்தார்கள். இறுதியில் அதுகுறித்து பேசிய இளையராஜா, “இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கான கட்டடத்தை என் சொந்த செலவில் கட்டி தர இருக்கிறேன்” என்று அறிவித்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியும் இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.