Skip to main content

"பாரதிராஜா போட்ட  சட்டையை நாம போட்டுட்டு போறதா, இது தப்பாச்சே... " - இளையராஜா ஓபன் டாக் 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

ilaiyaraaja talk about bharathiraja

 

தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான எழுத்தாளரான சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை தழுவி 'உலகம்மை' என்ற பெயரில் இயக்குநர் விஜய் பிரகாஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 'உலகம்மை' கதாநாயகனாக மித்ரன் நடிக்க, கதாநாயகியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் விஜய் பிரகாஷ் , இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படகுழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். 

 

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா இளையராஜாவை பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எல்லாரும் உன்னைய பற்றி நிறைய பேசிட்டாங்கடா. இந்த சூரியனை பற்றி எவ்வளவுதான் சொல்றது. இன்றைக்கு வரைக்கும் என் படம் பேசுகிறது என்றால் அதற்கு அவனின் பின்னணி இசைதான் காரணம். அதில் என்ன சிறப்புன்னா ஒரு ரீல ஒரு தடவைதான் பார்ப்பான். உடனே பேப்பரில் 'இதிலிருந்து இதுவரை, இதிலிருந்து இதுவரை... சைலன்ஸ' எனக் குறித்து வைத்து வாசிக்க ஆரம்பித்தான்னா படத்தின் இசை உடனடியாக தயாராகிவிடும். எப்படிடான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லுவான். என் நண்பன் என்ற முறையில் சொல்லவில்லை. தொழிலில் இவனிடம் சண்டைபோட்டு சமாதானம் ஆகியிருக்கேன். இவனின் 5 விரல்களிலும் சரஸ்வதி இருக்கிறாள்.  நாங்க ரெண்டு பேரும் ஒரு காலத்தில் ட்ராமாவில் நடிக்கும் போது மேடையில் வந்து கலாட்டா பண்ணி என்னை வாரு வாருன்னு வருவான்" எனக் கூறினார். 

 

இதனை தொடர்ந்து பேசிய இளையராஜா, "இந்த விஷயம் என்னென்னா அல்லி நகரத்தில் ஒரு ட்ராமா நடக்குது. ஒரு சீன் முடிஞ்சு அடுத்து சீனுக்கு மாத்திட்டு போக பாரதிராஜாவிடம் ட்ரெஸ் இல்ல. அதனால் என்ன பண்ணாரு, பக்கத்துல உக்காந்து வாசிச்சிட்டு இருந்த என்கிட்ட வந்து சட்டையைக் கழட்டு சட்டையை கழட்டுன்னு சொன்னார். யோவ் என்னையா நான் வாசிச்சிட்டு இருக்கேன், இப்போ வந்து சட்டையை கழட்டுன்னு சொல்றியே, நான் என்னையா பண்றதுன்னு கேட்டேன். அதன் பின் சட்டையை வாங்கிட்டு போய் ட்ராமால நடிச்சிட்டார். இதுல எனக்கு என்ன பிரச்சனைன்னா அடுத்த நாள் தெருவுல இந்த சட்டையைத்தான் நான் போட்டுட்டு போகணும்.  ஐயையோ இந்த சட்டையை நாளைக்கு நாம தெருவில போட்டுட்டு போனா எல்லாரும் பாரதிராஜா சட்டையைத்தான் இவரு போட்டுட்டு வாராருன்னு பேசுவாங்க. இது தப்பாச்சேன்னு சொல்லிட்டு அதே ட்ராமால இவரு பூட் பாலிஸ் போடுற கதாபாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தாரு. அப்போ நான் என்ன பண்ணுனேன் அந்த சட்டையை போட்டுட்டு உள்ள போயி இந்தா என் சூவுக்கும் பாலிஷ் போடுன்னு போய் நின்னுட்டேன்" எனக் கலகலப்பாக கூறினார்.

 

இதையடுத்து மீண்டும் பேசிய பாரதிராஜா இப்படித்தாங்க மேடையில நிறைய பேர் இருக்காங்கடா சும்மா இருடான்னு சொன்னா கூட கேட்கவே மாட்டான் இஷ்டத்துக்கு நம்மள வாரு வாருன்னு வருவான் என பாரதிராஜா கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.