ilaiyaraaja soori conversation at viduthalai 2 audio launch

‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய இளையராஜா முதலில் சூரி என சொல்லி பார்வையாளர்களை பார்த்தார். பின்பு என்ன கைதட்டல் காணும் என்று சிரித்தார். உடனே மேடையில் இருந்த சூரியிடம், “நீ கூட்டு வந்த ஆட்கள் சரியா வேலை செய்யலபாத்தியா...” எனக் கேட்டார். உடனே சூரி, “எல்லாமே என்னுடைய அன்பு தம்பிகள், அண்ணன்கள்தான் சார்” என்றார். பின்பு இளையராஜா, “அப்புறம் ஏன் உன் பேரை சொன்னதும் கை தட்டல, விசில் அடிக்கல” என கேட்க “நீங்க பேணுங்குறதுக்காக குறுக்கிடக்கூடாதுன்னு அமைதியா இருக்காங்க சார்” என சூரி பதிலளித்தார்.

Advertisment

பின்பு சூரியை பார்த்து, “எத்தன படத்துல கதாநாயகனா நடிக்கிறீங்க” என இளையராஜா கேட்க அதற்கு “கதையின் நாயகனா இரண்டு படத்துல நடிக்கப் போறேன் சார்” என சூரி பதிலளித்தார். உடனே இளையராஜா, “உன்னை கதாநாயகனா மாத்துனது வெற்றிமாறன் தான். காமெடியனா தான நடிச்சிக்கிட்டு இருந்த, இப்போ நீ நடிக்கிறது கதாநாயகனா காமெடியனா” என சிரித்தப்படியே சூரியை கிண்டலடித்தார். பின்பு, “முதலில் நான் வந்தவுடன் எனக்கு கை தட்டுவாங்கன்னு பார்த்தேன். பண்ணல. அதனால் சூரி பேரை சொல்லி கைதட்டல் வாங்கலாம்னு பார்த்தேன். உன் பேர சொல்லியும் கைதட்டல. அதுக்கு தான் உன்னிடம் கேட்டேன்” என சொன்னார். இவர்களின் உரையாடல் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.