இசையமைப்பாளர் இளையராஜா சோனி இசை நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் தனது இசை படைப்புகளுக்கு தான் மட்டுமே உரிமையாளர், இதற்கு மற்றவர்கள் உரிமை கோரவோ அல்லது அதனை பயன்படுத்துவதற்கோ அதிகாரம் இல்லை.
பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக சோனி நிறுவனம், அதன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பாடல்களை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் தன்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் பாடல்களை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாகக் கூறினாலும், அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதையும் மீறி சோனி நிறுவனம் தன்னுடைய பாடல்களை வருவதால் அதன் மூலம் சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி அதன் மூலம் ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள் மற்றும் வரவு செலவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என சோனி இசை நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.