ராபர்ட், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr). இவர்கள் இருவரும் முன்பு காதலித்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வணிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். வனிதா விஜயகுமாரே இயக்கியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இளையராஜா மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் தெரிவித்து படக்குழுவிற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படப் பாடலான ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடல் இடம்பெற்றுள்ளது. என்னுடைய அனுமதியில்லாமல் படக்குழு பாடலை பயன்படுத்தியுள்ளது. இது காப்புரிமை மீறிய செயல் என்பதால் அப்பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதி இப்போதைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீப காலமாக இளையராஜா தன்னுடைய பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக கூலி, மஞ்சும்மல் பாய்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.