
இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.