ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

Advertisment

இந்த படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாடல்களை பயன்படுத்தியதற்காக ராயல்டி தொகையை தர வேண்டும் என்றும் அல்லது பாடல்களை நீக்க வேண்டும் என்றும்  7 நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது.

இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என தெரிவித்து இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றும் அது தன்னுடைய இசை படைப்பு என்பதனால் பாடல்களை படத்தில் பயன்படுத்தியதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் சட்ட விரோதமாக பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாடலுக்கான சிறப்புரிமை இளையராஜாவிடம் தான் இருக்கிறது என வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மூன்று பாடல்களையும் படத்தில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு வாரங்களுக்குள் படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.