வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களிடமிருந்து 5 நிமிடங்கள் கைத்தட்டு பாராட்டை பெற்றிருந்தது.
இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. பின்பு டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அடுத்தாக படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தெனந்தெனமும் உன் நெனப்பு’ பாடல் நேற்று வெளியானது. படக்குழுவினர் இளையராஜாவை சந்தித்து பாடலை வெளியிட்டனர். இப்பாடலை இளையராஜா மற்றும் அநன்யா பாடியுள்ளனர். இளையராஜா பாடியதோடு இப்பாடலுக்கு வரிகளும் எழுதியுள்ளார். காதல் பாடலாக வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பாடல் வெளியீட்டு வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பாடல் சூழ்நிலை குறித்து விவரித்த இளையராஜா, ஒரு முட்டு பூவாக விரிகிறது, அந்த நிகழ்வுதான் இந்தப் பாட்டு என்றார். அப்போது விஜய் சேதுபதி மைக் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.