லண்டனில் அரங்கேறிய சிம்பொனி தமிழகத்தில்; தேதியுடன் அறிவித்த இளையராஜா

ilaiyaraaja about his symphony concert in tamilnadu

இசையில் இந்தியாவை தாண்டி உலகமெங்கும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்தவர் இளையராஜா. அவரது பெயருக்கு ஏற்றாற் போல் இன்றும் அந்த இளமை துள்ளல் குறையாது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு கடந்த மார்ச் மாதம் லண்டனில், தான் எழுதி முடித்த முதல் சிம்பொனியானியை அரங்கேற்றினார். இதன் மூலம் இலண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார். அவர் திரைத்துறைக்கு வந்து 50ஆண்டுகள் ஆகிறது.

இளையராஜா இதுவரை 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். 1,500க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். சினிமாவைத் தாண்டி இப்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜா இன்று 82வது பிறந்தநாள் காண்கிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, “என் மீது பாசமும் மரியாதையும் வைத்திருக்கக் கூடிய கோடான கோடி ரசிக பெருமக்களே, நீங்கள் சொல்கின்ற வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நன்றியை எப்படி சொல்வது என எனக்கு தெரியவில்லை. அதற்கு வார்த்தைகள் கிடையாது. ஆனால் உங்களுக்கு இந்த பிறந்தநாளில் ஒரு இனிய செய்தியை அறிவிக்கிறேன். வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி, நான் லண்டனில் இசையமைத்த சிம்பொனியை, அதே ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த போகிறேன். நான் அமைக்கின்ற இசை, உலகம் முழுவதும் ஒலித்து நம்முடைய பெருமையை வெளிநாட்டுக்கு சொல்வது போல அவர்களை இங்கே கொண்டு வந்து இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறேன். நீங்கள் கேட்டால்தான் அதற்கு பயன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் மட்டும் அங்கு போய் வாசித்து பெயர் பெற்றல் போதுமா. என்னுடைய மக்கள் அதை கேட்க வேண்டும். இது போன்ற இசையெல்லாம் இருக்கிறது என்று அவர்களுக்கு நான் அறிவிக்க வேண்டும். அவர்களை மேம்படுத்த வேண்டும்” என்றார்.

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Subscribe