
இளையராஜா தனது இசையின் மூலம் எண்ணற்ற மனங்களை வென்ற நிலையில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே இன்றளவும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கரூரில் நடத்தினார். அப்போது சில ரசிகர்களுக்கு டிக்கெட் வாங்கியும் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு ரசிகர் விரக்தியில் டிக்கெட்டை கிழித்து போட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அரங்கேறியது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான முறையில் வசதிகள் செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி கோயம்புத்தூரில் இளையராஜா கச்சேரி நடக்கவிருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 31ஆம் தேதி கோவையில் செவென் ஹில்ல்ஸ் சிட்டி கிரௌண்ட்ஸ், ஜி ஸ்கொயரில் நடைபெறவுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் ஏற்கனவே 17ஆம் தேதி பெற்ற டிக்கெட்டுகளை வைத்து 31ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இளையராஜா கோவை இசைக்கச்சேரி ஜுன் 7ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பேரன்பு மிக்க ரசிக பெருமக்களே, வருகின்ற மே 17ஆம் தேதி கோவையில் நடைபெறவிருந்த என்னுடைய இசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 7ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த மாற்றம் என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கே நன்றாக தெரியும் நாட்டினுடைய பதற்றமான சூழ்நிலையில் நமது இசை நிகழ்ச்சி வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் மாற்றி வைத்திருக்கிறோம். அது சிறப்பாக நடைபெற எல்லாமுள்ள இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.