Skip to main content

மணிரத்னம் மீது பொறாமை கொள்ளும் இரண்டு நபர்கள் - கமல்ஹாசன் 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

I am the second person who is jealous of Mani Ratnam; The first person.... - Kamal Haasan

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு இயக்குநர் மணிரத்னம் உடன் இணையும் படம் குறித்த தகவலை வெளியிட்டார்.

 

கமல்ஹாசன் பேசியதாவது “சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள். சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் போன்று சில படங்கள் கைவிட்டும் போனது. 

 

மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா. இப்படிப்பட்ட‌ படத்தை இயக்கிவிட்டு அமைதியாக மணிரத்னம் அமர்ந்திருக்கிறார். இது எங்கே போகும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. துபாயில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்கஸ்ட்ராவில் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பொறாமைப்பட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. சினிமா வாய்ப்பு இன்னமும் சிறியது. அதில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றாக இருந்து ரசிக்க வேண்டும். 

 

காதலா? வீரமா? என்றார்கள். காதலுடன் கலந்த வீரம் வேண்டும். காதலும் வீரமும் இன்றி தமிழ் கலாச்சாரம் கிடையாது. இதுதான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பக்தி மார்க்கம் பிறகு வந்ததுதான். உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப் பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது. 

 

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னன்னு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை என்றார்.


 

சார்ந்த செய்திகள்