Skip to main content

“அப்போ மங்காத்தாவா? என உடனே கேட்பார்கள்” - ‘துணிவு’ படம் குறித்து ஹெச்.வினோத்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

h.vinoth about ajith in thunivu

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. 

 

மேலும், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சஷன் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலையும் மஞ்சுவாரியர் ஒரு பாடலையும் பாடியுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட அப்டேட்டுகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. 

 

இந்நிலையில், 'துணிவு' படம் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு ஹெச்.வினோத் பல நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், "இப்படம் பணம் சம்பந்தமான படம். பணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்று. ஆனால், பணம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? என்று கேட்டால், யாருக்கும் ஒரு யோசனை இருக்காது. அதுதான் இப்படத்தின் அடிப்படைக் கரு. இது பணத்தை பத்தின ஒரு படம். மல்டி ஜானர் படம், ஒரு ஜானருக்குள் அடக்க முடியாது. சுருக்கமா சொல்லணும்னா இது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்" எனக் கூறினார்.

 

மேலும், நெகட்டிவ் ரோலில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டது தொடர்பாக அவர் பதிலளித்தது, "இதற்கு ஆமாம் எனச் சொன்னால். உடனே ‘அப்போ மங்காத்தாவா?’ எனக் கேட்பார்கள். அவங்க சொந்தக் கற்பனையைச் சொல்றதுதான் இங்க பிரச்சனை. இப்படத்தில் மக்களுக்குப் பிடித்த அனைத்து விஷயங்களும் இருக்கும். அஜித் சாரிடம் நான் அரசியல் பற்றி பேசியதில்லை. தனிப்பட்ட விஷயங்களையோ அல்லது அரசியல் தொடர்பான பேச்சுகளோ நாங்கள் இதுவரை பேசியதில்லை. அப்படியே யாராவது அரசியல் குறித்துப் பேசினால், அந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று மரியாதையுடன் கூறுவார்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்