இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தங்களது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், “ஒரு நடிகராக எனது முதல் அடியை உங்கள் அருகில் இருந்து தான் எடுத்து வைத்தேன். எனது முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து உத்வேகமாக இருங்கள். 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூலி படம் வெளியாகும் அதே தினமான நாளை, ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ படமும் வெளியாகிறது. இப்படத்தில் ஜூனியஎ என்.டி.ஆரும் நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்திற்கும் வட இந்தியா மற்றும் ஆந்திரா, தெலங்கானாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஹிருத்திக் ரோஷன், ரஜினி நடித்த இந்தி படமான ‘பகவான் தாதா’-வில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.