
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2000ஆம் ஆண்டு சுஷானேனை திருமணம் செய்து கொண்டார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஹிரித்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகி ஷபா ஆசாத் என்பவரை சமீப காலமாகக் காதலித்து வருகிறார். இருவரும் வெளியில் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் மூன்று மாடிகள் கொண்ட ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த வீடு ரூ.100 கோடி என்று சொல்லப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப் முறையில் இருக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள ஹிரித்திக் ரோஷன். அவரது ட்விட்டர் பதிவில், " இதில் சிறிதளவும் உண்மை இல்லை. பொது வெளியில் அறியப்படும் பிரபலமான முகமாக இருக்கும் நான், மிகுதியான ஆர்வத்தோடு கண்காணிக்கப்படும் நபராக இருக்கிறேன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இதுபோன்ற போலி செய்திகளிலிருந்து விலகியிருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.