
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன். 'தூம் 2', 'கிரிஷ்' போன்ற படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். அவருடைய நடனத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். பல வருடமாக தோல்விகளைச் சந்தித்து வந்த ஹிர்த்திக் ரோஷனுக்கு, கடந்த வருடம் ஒரு சிறப்பான வருடமாக அமைந்தது. அவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான, 'சூப்பர் 30', 'வார்' உள்ளிட்ட இரண்டு படங்களுக்கும் நல்ல ஹிட் அடித்தது.
மும்பையில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் தாயார் பிங்கி ரோஷன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிர்த்திக்கின் தாயார் கூறுகையில், “இருபது நாட்களுக்கு ஒரு முறை முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளுவோம். அப்படி இந்த முறை பரிசோதனை செய்துகொண்டபோது எனக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது" எனக் கூறியுள்ளார். மேலும், அவர் தனக்குக் கரோனா அறிகுறி எதுவும் இல்லை எனவும் விரைவில் தொற்றிலுருந்து விடுபடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.