Advertisment

"இவையெல்லாம் உனக்கான பரிசுகள்..." ஷாருக்கான் மகன் கைது குறித்து ஹ்ரித்திக் ரோஷன் பதிவு! 

Hrithik Roshan

Advertisment

பாலிவுட் திரையுலகின் உச்சநட்சத்திரமான ஷாருக்கானின் மகன் ஆர்யன், கடந்த 2ஆம் தேதி போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எட்டு பேரை கைதுசெய்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து, ஆர்யனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்று (07.10.2021) மாலை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பிணை கேட்டு ஆர்யன் தரப்பு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "என் இனிய ஆர்யன்... வாழ்க்கை எனும் பயணம் வினோதமானது. அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக உள்ளது. நம்மை நோக்கி எதிர்பாராத ஒன்றை வீசுவதால்தான் அது உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால், கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களை அவர் தருவார். இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை ஆகியவை உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவர தேவையான விஷயங்கள்.

ஆனால், அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு ஆகிய நல்ல விஷயங்களையும் எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. உன் அனுபவத்தில் கிடைக்கும் விஷயங்களில் எதை வைத்துக்கொள்ள வேண்டும், எதைத் தூக்கியெறிய வேண்டும் என்று உனக்குத் தெரிந்தால் தவறுகள், தோல்விகள், வெற்றிகள் எல்லாம் ஒன்றுதான் என்பதும் உனக்குப் புரியும். ஆனால், இவற்றோடு உன்னால் நன்றாக முதிர்ச்சியடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைச் சிறுவனாகவும், வளர்ந்த பிள்ளையாகவும் எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நீதான் பொறுப்பு என்று அவற்றை ஏற்றுக்கொள். எல்லா அனுபவங்களையும் ஏற்றுக்கொள். அவைதான் உனக்கான பரிசுகள்.

Advertisment

ஒரு கட்டத்தில் எல்லாம் உனக்குப் புரியும்போது இவற்றின் அர்த்தமும் உனக்குப் புரியும். அனைத்தையும் நன்றாகக் கவனி. இந்தத் தருணங்கள்தான் உன்னை உருவாக்கும். உனக்கான சிறப்பான காலம் காத்திருக்கிறது. அந்த வெளிச்சத்துக்கு முன்னால் நீ இருட்டைக் கடந்தாக வேண்டும். அமைதியாக இரு. அனைத்தையும் ஏற்றுக்கொள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

hrithik roshan
இதையும் படியுங்கள்
Subscribe