Skip to main content

வீழ்ந்துவிட்டாரா சூர்யா?

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

surya

 

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான படம் காப்பான். சூர்யா - இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் இதுவாகும். முதன் முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான ‘அயன்’ படம் பெரிய வெற்றிபெற்றது. ஏ.வி.எம். நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் ’மாற்றான்’ வெளியானது. அயன் அடைந்த வெற்றியினால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ஒரளவிற்குதான் பேசப்பட்டது. மூன்றாவதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ’காப்பான்’ படத்திற்கு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்தன.

 

‘காப்பான்’ படத்திற்கு முன்பாக வெளியான படங்களான ’என்.ஜி.கே’, ’தானா சேர்ந்த கூட்டம்’, ’24’, ’மாசு என்கிற மாசிலாமணி’, ’அஞ்சான்’ உள்ளிட்ட படங்களும் சூர்யாவிற்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வந்த சிங்கம்-3 மட்டுமே வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சிலர், சமீபத்திய அரசியல் பேச்சுகளால் சூர்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது எனவும், சூர்யாவின் சினிமா பயணம் அவ்வளவுதான் எனவும் பேசினர். அவர்கள் பேசும் அளவிற்கு சூர்யா வீழ்ந்துவிட்டாரா என்ன?

 

vijay surya

 

சரி, இப்போது வீழ்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்தது. வாரிசு நடிகராக இருந்தாலும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் மிகக் கடினமானதாகவே இருந்தது. முதல் படமான ‘நேருக்கு நேர்’ வெற்றி பெற்றாலும் அதற்குப் பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘நந்தா’ திரைப்படம்தான் ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது. கமர்ஷியல் வெற்றி என்றால் அது ‘காக்க காக்க’வில் இருந்துதான் - இதுதான் முறையான கமர்ஷியல் வெற்றி.

 

அதற்கு முன்புவரை நடிக்க தெரியாதவர், நடனமாட தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாகக் கிண்டல் செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்து முன்னணி ஹீரோவானார் சூர்யா. தமிழ் சினிமா வரலாற்றைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் அதில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. ஆரம்பக்கட்டம், சற்று கடுமையாகவும், கரடுமுரடாகவும் இருந்து அதைத் தாண்டி விடாமுயற்சியோடு தொடர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும்.

 

இப்படித் தோல்விகளைக் கடந்து முன்னணி நாயகனான சூர்யா நடிப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது 'அகரம்' அறக்கட்டளை மூலமாக வாய்ப்பிழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கைத்தூக்கிவிடுகிறார். சமீப காலமாக பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மேலோட்டமானவை அல்ல. இப்படிக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வரும் சூர்யாவிற்கு இந்த இடைவெளி ஒரு வீழ்ச்சி அல்ல. இப்போது ‘சூரரைப் போற்று’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

“ஒரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார் ‘உனக்கு எப்படிடா தூக்கம் வருது. இன்னும் எதையும் சாதிக்காம’ என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றிபெறும்வரை சரியாகத் தூங்கியது கிடையாது”- இது சூர்யா ஒரு பேட்டியில் கூறியது. இப்படிப்பட்ட அவர் மீண்டும் தன்னிடத்திற்கு வருவார். வரும்வரை உறங்க மாட்டார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

‘ஜெய்பீம்’ அங்கீகாரம் சிலிர்ப்பூட்டுகிறது; முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The 'Jaibhim' recognition Thanks Surya

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடையச் செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.