/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/plan333.jpg)
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்திற்கு பிறகு நடிகர் ரியோ நடிப்பில் வெளியாகியிருக்கும் 2வது திரைப்படம். நீண்ட இழுபறிக்குப் பிறகு பல சிக்கல்களை கடந்து ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா?
ரியோவும் பால சரவணனும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு ஒரு நடிகையை விருந்தினராக அழைக்கின்றனர். அந்த நடிகைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணமும், பால சரவணனின் தங்கை 'அராத்தி' பூர்ணிமா ரவியும் காணாமல் போகின்றனர். ரியோவும் பால சரவணனும் பூர்ணிமா ரவியை தேடி செல்கின்றனர். இதையடுத்து பூர்ணிமா ரவி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக வீட்டிலிருந்து நாயகி ரம்யா நம்பீசனின் உதவியோடு ஓடிவிட்ட உண்மையை இவர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரம்யா நம்பீசனை அழைத்துக்கொண்டு ரியோ, பாலசரவணன் இருவரும் ஆனந்தி திருமணத்தை நிறுத்த ரம்யா நம்பீசன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். போன இடத்தில் பூர்ணிமா ரவி திருமணம் நடந்ததா, இல்லையா? ரியோ, பாலசரவணனை ரம்யா நம்பீசன் தடுத்தாரா, இல்லையா? காணாமல் போன பணம் என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு சின்ன கதையை கலகலப்பாகவும், காமெடியாகவும் ரசிக்கும்படி உருவாக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். ஏற்ற இறக்கம் நிறைந்த ரோலர் கோஸ்டர் பயணம் போல் காமெடி காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குநர். இவரின் இந்த திரைக்கதை யுக்தியால் சில இடங்களில் சிரிப்பும், சில இடங்களில் அயர்ச்சியும் மாறிமாறி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதுவே படத்திற்கு சற்று பாதகமாகவும் அமைந்துள்ளது. ஒரு சில காட்சிகள் நல்ல சிரிப்பு வர வைத்தாலும் ஒரு சில காட்சிகள் நம்மை சோதிக்கவும் தவறவில்லை. சீரான திரைக்கதை அமையாததை இதற்கு காரணமாக சொல்லலாம்.
நாயகன் ரியோ எப்போதும் போல் அவரது அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி சில இடங்களில் ரசிக்க வைத்துள்ளார். இவருக்கும் பாலசரவணனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருந்தாலும் கதைக்களம் அதற்கு ஏதுவாக அமையாதது சற்று மைனஸ் ஆக அமைந்துள்ளது. இவருக்கும் ரம்யா நம்பீசனுக்கு மன காதல் காட்சிகள் சற்று உணர்வுபூர்வமாக அமைந்து ரசிக்கும்படியாக இருக்கிறது. பால சரவணன், கதாப்பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவ்வப்போது டைமிங் பஞ்ச் காமெடி வசனங்களை பேசி கவனம் பெற்றுள்ளார்.
காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் சிரிப்பை மட்டும் வரவழைக்காமல் சோதிக்கவும் செய்துள்ளார். இவரது விஷ பாட்டில் காமெடி ஆரம்பத்தில் சிரிப்பு வரவழைத்தாலும் பின் வரும் காட்சிகளில் ரசிகர்களை ரொம்பவே சோதித்து விடுகிறது. சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பை கூட்டி மனதில் பதியும்படி நடித்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். வழக்கமான கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யா நம்பீசன் மற்றும் அவரது அப்பா ஆடுகளம் நரேனுக்கும் இடையேயான சென்டிமெண்ட் காட்சி ரசிக்கும்படி இருக்கிறது. நாயகியின் தாய்மாமாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டி உள்ளார். இவருடன் டைகர் கார்டன் தங்கதுரையும் கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். பால சரவணனின் தங்கையாக நடித்திருக்கும் அராத்தி பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக நடித்து இறுதியில் மூச்சு விடாமல் சூப்பர் டயலாக் பேசி கைத்தட்டல் பெற்றுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே. ராஜசேகரின் ஒளிப்பதிவில் ரோடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.
தற்போது இருக்கும் சினிமா டிரெண்டுக்கு மத்தியில் ரொம்பவே பழைய டிரெண்ட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காமெடி படம் எந்த கால ரசிகருக்கும் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான்!
பிளான் பண்ணி பண்ணனும் - காமெடியை இன்னமும் பிளான் பண்ணி பண்ணியிருக்கலாம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)