
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்த சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.
இந்த சூழ்நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?. இத்தனை கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிஸோடுகளில் பதில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.