
தமிழில் காந்தர்வன், சிங்கம் புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் ஹனி ரோஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஜனவரியில் வெளியான பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஹனி ரோஸ், அண்மையில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது தான் உருவ கேலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். கதாநாயகிகள் எடை கொஞ்சம் கூடுதலாக இருந்தால் உடனே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்கள். அந்த வகையில் என்னுடைய ஆடை மற்றும் உருவம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது" என்றார்.