'His songs reflect different emotions' - Prime Minister Modi's condolences on singer KK's death

கிருஷ்ணகுமார் குன்னத், பிரபல பின்னணி பாடகரான இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். 1997-ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெரி கண்ணே' பாடல் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். திரைத்துறையில் வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு பாடியுள்ளார். தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Advertisment

தமிழில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்), உயிரின் உயிரே (காக்க காக்க), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), வார்த்தை ஒன்னு (தாமிரபரணி), என் வெண்ணிலவே (ஆடுகளம்), நீயே நீயே நானே நீயே (எம். குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி) என 60-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போது தீடீரென மேடையை விட்டு வெளியேறினார். அங்கு இருந்து, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது தீடீரென மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகுமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இவரது மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அமித் ஷா, ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தள பக்கத்தில் மூலமாக தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி கேகே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், "பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரின் குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் ஷாந்தி" என குறிப்பிட்டுள்ளார்.