Advertisment

இணையத்தில் வைரலாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் படம்!

cfgaega

தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, “தீ வீரன்” எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படம் குறித்து ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார். அதில்...

Advertisment

"இது அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் கோவிட் நோய் தொற்று அதிகரித்த காலத்தில் தான் துவங்கியது. தீயணைப்புதுறை மாவட்ட அதிகாரி திரு.ராபின் அவர்களின் அழைப்பின் பேரில், அம்பத்தூர் தீயணைப்பு அலுவலகத்தின் தினசரி நடவடிக்கைகளை பார்வையிட அழைக்கப்பட்டேன். என்னை பொறுத்தவரை தீயணைப்பு துறையினர் என்பவர்கள் காவல்துறை போலவே உடை அணிபவர்கள். தீவிபத்து நேரிடும்போது மக்களுக்கு விரைந்து உதவுபவர்கள் என்கிற எண்ணமே இருந்தது. ஆனால் அவர்களுடன் ஒன்றாக செலவழித்த அரை நாளிலேயே, என் எண்ணம் சுக்கு நூறாக உடைந்தது. அவர்களின் பணியை குறித்து மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கை குறித்த என் எண்ணமும் முற்றாக மாறியது.

Advertisment

மிகவும் கடினமான கோவிட் நோய்தொற்று காலத்தில் அனைவரும் வீட்டிலிருக்கும் நேரத்தில், உதவி தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் இந்த தீயணைப்பு வீரர்கள் பம்பரம்போல் சுழன்று பணியாற்றி கொண்டிருந்தார்கள். கடின காலத்தின் முன்கள பணியாளர்களாக அவர்கள் முழு விருப்பத்துடனும், மிக மகிழ்வுடனும் மக்களுக்கு உதவினார்கள். அவர்களுக்கு அவர்கள் குடும்பமும் துணையிருந்தது. இவையாவும் என்னுள் பெரும் மாற்றங்களை, நேர்மறை தன்மையை உருவாக்கியது. பெரும் நம்பிக்கையை விதைத்தது. இவர்களின் உழைப்பை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்கிற எண்ணம் என்னுள் வலுவாக ஆட்கொண்டது.

ராபின் சார் அவர்களிடம் ஆவணப்படம் எடுக்கும் அனுமதியைக் கோரினேன். இரண்டு மாத காலம் நிலைமை சரியாகவும், அவர்களின் அன்றாட வாழ்வினை பதிவு செய்யவும் அனுமதி கேட்டேன். இந்த ஆவணப்பட பதிவு காலத்தில் அங்கிருந்த ஊழியர்களுடன் தொடர்ந்து உரையாடியதில் அனைவரும் மிகுந்த நெருக்கமான உறவாக மாறிவிட்டார்கள். உண்மையாக சொல்வதானால் இந்த அனுபவம் எனது புறவாழ்க்கையை வெகுவாக மாற்றியது. இது கலை வடிவமாக மாறும்போது காண்போருக்கு பெரும் நம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். மேலும் உதவி தேவைப்படுவோருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்தெடுக்கும். இம்மாதிரியான தாக்கங்கள் என் வாழ்விலேயேயும் நடந்ததுள்ளது. எனது சுய விருப்பத்தின் பேரில் நான் வாங்கிய மாடு, பின்னொரு நாளில் “டக்கரு டக்கரு” உருவாக காரணமாக அமைந்தது.

2012 காலத்தில் இருந்து சமூகம் குறித்து பல ஆவணப்படங்கள் எடுத்திருந்தாலும் “டக்கரு டக்கரு” எங்களுக்கு பெரியளவில் பெயர் பெற்று தந்தது. அதே போல் “தமிழி” துவங்கியதுவும் சுய விருப்பத்தின் பேரில் தான். ஆனால் அதனை முடிக்க 2 வருட காலம் ஆனது. இறுதியாக 8 அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணங்கள் குறித்த ஆவணப்படமாக அது உருமாறியது. அதே போல் தான் “மாணவன்” ஆவணப்படமும். இச்சமூகத்தில் மாணவனின் கடமை குறித்த அந்த ஆவணப்படம், இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. தீயணைப்புத் துறையை பார்வையிட சென்ற ஒரு நாள் பெரும் தாக்கத்தை உருவாக்கி, இப்போது “தீ வீரன்” உருவாக ஒரு வருட கால நேரத்தை எடுத்து கொண்டது.

நாம் எதை செய்ய வேண்டும் என்கிற தெளிவும் நமது பார்வையும் சரியாக இருந்தால் மற்றவை நன்றாக நடக்கும். உங்களின் நம்பிக்கை உங்களை கைவிடாது. எங்களது இந்த ஒரு வருட பயணம் நிறைய நம்பிக்கை உழைப்பு, தியாகத்தினை, கொண்டது. இந்த ஆவணப்படத்தை உருவாக்கியது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த இனிய நேரத்தில் ஆவணப்படத்தை உருவாக்குவதில் முழு ஆதரவை தந்த தமிழ்நாடு தீயணைப்பு துறை முதன்மை அலுவலர். திரு Dr.C.சைலேந்திர பாபு IPS அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதோடு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்த மற்ற அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் இந்த "தீவீரன்" ஆவணப்படத்தை சமர்பிப்பதோடு, எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

hiphop adhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe