Skip to main content

"பதில் சொல்லாம போற ஆளு நான் இல்லை" - சர்ச்சை சம்பவம் குறித்த கேள்விக்கு ஹிப்ஹாப் ஆதி

 

hiphop aadhi recent press meet

 

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரன்'. கதாநாயகியாக அதிரா ராஜ் நடிக்க வில்லனாக வினய் ராய் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை பணிகளை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினர். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப்ஹாப் ஆதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் இருக்கும். முகச்சுழிவு காட்சிகள் கிடையாது. அதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வரலாம்" என்றார். 

 

இதனிடையே செய்தியாளர் ஒருவர், "3 வருடம் கழித்து திரைத்துறைக்கு வந்துள்ளீர்கள். சமீபத்தில் டாக்டர் பட்டம் வாங்கினீர்கள். ஆனால் படத்தில் அதை குறிப்பிடவில்லை. உங்களுக்கும் இயக்குநருக்கும் ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஹிப்ஹாப் ஆதி, "இந்த மாதிரி சர்ச்சையான கேள்விகள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை" என்றார். 

 

பின்பு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்தான கேள்விக்கு, "இந்நிகழ்ச்சி வீரன் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் படம் குறித்து மட்டும் பேசுங்கள் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் என்னை கேட்டுக்கொண்டார். மற்ற விஷயங்களை பிறகு பண்ணுமாறும் சொன்னார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக படம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன். இன்னொரு முறை இன்னொரு சந்திப்பில் தொடர்ந்து மற்ற விஷயங்கள் பற்றி பேசலாம். அப்போது என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்க கேட்கலாம். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாம போற ஆளு நான் இல்லை" எனப் பதிலளித்தார்.