
திருச்சி மாரிஸ் எல்.ஏ. திரையரங்கில் நேற்று(26.5.2024) ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பி.டி. சார் திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தின் இடைவேளையில் தோன்றிய படத்தின் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தை வெற்றி அடையச் செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திரையரங்கில் ஹிப் ஹாப் பாடலை ஆதி பாட, ரசிகர்களும் அவருடன் இணைந்து பாடினர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப் ஹாப் ஆதி, “படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. இரவு காட்சி திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இங்கு வந்தபோது ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களது களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. நான் கொடுத்து வைத்தவன். சில யூடியூப்களில் இத்திரைப்படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து. திரையரங்குகளில் இந்த படத்தின் வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள். அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் நடிகர், இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என என்னை அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம். நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன்” என்றார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆதியிடம், நெல்லையில் தீபக் ராஜா கொல்லப்பட்டதற்கு பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து நீங்கள் என்னை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, ஆணவக் கொலையா? என்று கேட்ட ஆதி, எனக்கு இந்த கொலையைப் பற்றி எதுவும் தெரியாது; முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்கிறேன். தெரியாததைப் பற்றி எப்படி கருத்துசொல்ல முடியும். ஆணவக் கொலைக்கு என்றைக்கும் நான் எதிரானவன்; நான் மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரும் ஆணவக் கொலைக்கு எதிரானவர்கள்தான் என பதிலளித்தார்.
மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்” என கூறி அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.