தமிழில் 2013ஆம் ஆண்டு ‘அஞ்சல் துறை’ என்ற தலைப்பில் வெளியான படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை குஷி முகர்ஜி. பின்பு தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்தார். இதனிடையே முகழ் சுழிக்கும் வகையில் கவர்ச்சி உடை அணிந்து விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளர்.
இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டதாக குஷி முகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருட்டை தனது வீட்டு பணிப்பெண்ணால் நடந்ததாக கூறுகிறார். சம்பவம் நடந்த பிறகு அந்த பணிப்பெண்ணும் காணாமல் போனதாக தெரிவிக்கும் அவர், வாழ்க்கையின் மிகவும் துயரமான அனுபவங்களில் இதுவும் ஒன்று என சொல்கிறார். அதோடு, விலையுயர்ந்த நகைகள் திருடு போனதைவிட வீட்டினுள் ஒருவரின் மீது நம்பிகையை இழந்தது தான் பெரிய இழப்பு எனவும் சொல்கிறார். இது குறித்து காவல் நிலையத்தில் விரைவில் புகார் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பேசிய அவர், “சொந்த வீட்டிற்குள்ளேயே நாம் நம்பும் ஒருவர் இது போன்று துரோகம் செய்வது மிகவும் மன வேதனையாக இருக்கிறது. நகைகளை விட, என்னிடமிருந்து திருடப்பட்ட பாதுகாப்பான சூழல் மற்றும் நம்பிக்கையின் உணர்வுதான் அதிகம். துரோகம் என்னை உடைத்திருந்தாலும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்” என்றார். இப்போது காணாமல் போன பணிப்பெண்ணை தேடும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.