
சமூக வலைதளம் மற்றும் சின்னதிரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. இவர் தூத்துக்குடியில் வசித்து வரும் நிலையில் அந்த, பகுதியில் பழமை வாய்ந்த கோயில் ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக சாலையை ஆக்கிரமித்து இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் கீழத் தெருவை காணவில்லை என்றும் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும் அந்த தெரு பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என புகார் கொடுக்கும் பாணியில் இருப்பதாக பலராலும் பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த ஊர் மக்கள் ஜி.பி. முத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி ஊர் கோயில் கட்ட இடையூறு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜிபி முத்துவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஜி.பி. முத்து வெளியே வந்ததால் அவருக்கும் ஊர் மக்களுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் முற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு ஜி.பி. முத்துவை காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஊர் மக்கள், ஜிபி முத்து பிரபலமடைந்ததால் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கேட்டதாகவும் அதை அவருக்கு வழங்காததால் தங்களை மிரட்டி வருவதாகவும் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கோயில் பணிகளை தொடர்ந்து செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஜி.பி. முத்து வீட்டை மீண்டும் முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளதால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.