ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் எம்மா வாட்சன். ஹாலிவுட்டில் புகழ் பெற்ற ‘ஹாரிபாட்டர்’ படங்களில் சிறுவயதிலே நடித்து அதன் மூலம் பிரபலமானவர். பின்பு தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான ‘லிட்டில் வுமன்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. நடிப்பில் இருந்து விலகியே உள்ளார்.  

Advertisment

இந்த நிலையில் இவருக்கு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் விலையுயர்ந்த சொகுசு காரில் 30 கி.மீ. வேகம் செல்லக்கூடிய வரம்புக்குள் 38 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்பே எம்மா வாட்சன், தனது லைசன்ஸில் பல முறை அபராதம் பெற்றுள்ளார். இந்த அதிவேக சம்பவம் மூலம் மேலும் அபராதங்கள் சேர்ந்ததால் அவரது ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அந்நாட்டு சட்டத்தின் படி ஒரு அளவுக்கு மேல் அபராத புள்ளிகள் அதிகரித்தால் ஆறு மாதம் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisment

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் விசாரணைக்கு எம்மா வாட்சன் ஆஜராகவில்லை. ஆனால் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை அபராதத்தைச் செலுத்தவுள்ளதாக கூறினார். பின்பு அவருக்கு நீதிமன்றம் £1,044(இந்திய ரூபாயின் படி ஒரு லட்சத்து இருபதாயிரம்) தொகை அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. 

இதே போல் ஹாரிபாட்டரின் இன்னொரு நடிகையான ஜோய் வனமேக்கர், தென்கிழக்கு இங்கிலாந்தில் 40 கி.மீ. வேக வரம்புக்குள் செல்லக்கூடிய பகுதியில் 46 கி.மீ. வேகத்தில் சென்றதால் அவருக்கும் ஆறு மாதம் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Advertisment