
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். கடைசியாகத் தெலுங்கில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஓ மணப்பெண்ணே' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அன்மையில் அறிவித்திருந்தார். அதன் படி நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் ஹரிஷ் கல்யாண். அப்போது பேசுகையில், "எங்களுடைய திருமணம், நாளை (28.10.2022) சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. எல்லாரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அடுத்த நகர்வு இருக்கும். இப்போது நான் அந்த இடத்தில் இருக்கிறேன். இது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
திருமணம் பொறுத்தவரை பிரமாண்டமாக நான் பார்ப்பது இரு குடும்பங்களும் இணைந்து சேர்ந்து நடத்துவது தான். நிறைய பேர் இதனை காதல் திருமணம் என்று நினைத்து கொண்டுள்ளனர். உண்மையில் இது காதல் திருமணம் இல்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம். நானும் எனது துணைவியாரும் ஒரு அழகான பயணத்தை முழு மனதுடன் தொடங்க இருக்கிறோம். திருமணத்திற்கு முன்பு பின்பு என்று திரைப்படங்களுக்கு அப்படி பார்ப்பதில்லை. என்றும் நல்ல கதைகள் கொண்ட படங்கள் கொடுக்கணும். மக்களை மகிழ்விக்கணும். இதுநாள் வரை அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது. இனிமேலும் அப்படித்தான் அமையும் என்று நம்புகிறேன். திருமணத்திற்கு நிறைய பேரை அழைத்திருக்கிறோம். கமல் சார் மற்றும் விஜய் சாரையும் அழைத்திருக்கிறோம்." என்றார்.
மேலும் பத்திரிகை நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் ஹரிஷ் கல்யாண் நன்றி தெரிவித்தார்