இயக்குநரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்

harish kalyan gifted parking movie director regards his movie hit

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது ஹரிஷ் கல்யாண் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும். படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”.

ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe