
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டிற்கு மேலாக கடந்துவிட்டது. தொடர்ந்து அப்டேட் எதுவும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள் மட்டும் இடையில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்ரைலரில், கிரிக்கெட் போட்டியில் தினேஷூம் ஹரிஷ் கல்யாணும் அவரவர் ஊர்களில் சிறந்த வீரராக இருக்கின்றனர். பின்பு இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை உருவாக அதில் யார் ஜெயித்தார் என்பதை படத்தில் ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் தினேஷின் மகளான சஞ்சனாவை ஹரிஷ் கல்யாண் காதலிக்க, சஞ்சனாவின் சம்மதத்தோடு அவர் வீட்டிற்கு பொண்ணு கேட்க போகும் காட்சிகள் இடம்பெறுகிறது. அப்போது ‘நீங்க என்ன ஆளுங்கன்னு சொல்லவே இல்ல’ என்ற வசனம் வருகிறது. இப்படத்தில் காதல், அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்கள். ட்ரைலரில் இடம்பெறும் ‘ஊருக்கு நல்லவனா இருக்கிறவங்க வீட்டுக்கு நல்லவங்களா இருக்கமாட்டாங்க’, ‘ஒரு திறமைக்காரன் இன்னொரு திறைமைக்காரன ஒத்துக்கிட்டதா சரித்திரமே இல்லை’ போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.