ADVERTISEMENT

“தெலுங்கு திரையுலகம் போல் தமிழ்த் திரையுலகமும் ஒன்றிணைய வேண்டும்”- ஹரிஷ் கல்யாண் விருப்பம்

10:19 AM May 08, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாகவும், அதற்கு நன்கொடை செய்யலாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல அவரது அறக்கட்டளைக்கு சுமார் 70 லட்சம் நன்கொடையும் வந்துள்ளது. உதவிடக் கோரியும் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக உதவி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு உதவிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விஜய் தேவரகொண்டாவின் இந்தச் செயலைக் கடுமையாகத் தாக்கி தனியார் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டது.

அதற்குப் பதிலடி தரும் வகையில் விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய நன்கொடைகளைப் பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? இது நான் உழைத்துச் சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் அவற்றை நான் வழங்குகிறேன்." என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்குத் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாகத் தமிழக நடிகர் ஹரிஷ் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சகோதரர் விஜய் தேவரகொண்டாவின் தாரள மனதுக்கும், மக்களுக்கு உதவியதற்கும் பாராட்டுகள். கண்டிப்பாக இதை நான் எதிர்காலத்தில் பின்பற்றுவேன்.

மேலும் போலிச்செய்திகளையும், கிசுகிசு இணையத்தளங்களையும் எதிர்த்து சிரஞ்சீவி அவர்கள், நாகார்ஜுனா அவர்கள், மகேஷ் பாபு அவர்கள், மேலும் பல நடிகர்கள் தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமே குரல் கொடுத்திருக்கிறது. இது அவர்களின் உறுதியான ஒற்றுமையைக் காட்டுகிறது.


நாமும் இன்னும் கொஞ்சம் ஒற்றுமையாக, பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து உதவி செய்து கொண்டால், கண்டிப்பாக நம் வழியே வரும் தடைகளை எதிர்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஊரடங்குக்குப் பிறகு வரும் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும். இது நமது துறைக்குப் பெரிய ஊக்கத்தையும், நமது துறையிலிருப்பவர்கள் தொடர்ந்து பிழைக்கவும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT