hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.

Advertisment

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும்.

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித்தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.