மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் படம் சைக்கோ. இந்த படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன.

வால்டர் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கின் கலந்துகொண்டபோது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் பேசியிருந்தார். அப்போது அதில், “சைக்கோ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் இருக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. என் அண்ணன் ராவணன் எனக்கு சாப்பாடு போட்டிருக்கிறார் என்று கூறி கும்பகர்ணன் அவருக்கு ஆதரவாக போரில் சண்டையிடுவதில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை.
நாளை ராமனிடம் செத்துப் போகப் போகிறேன். ஆனால் இத்தனை நாள் வளர்த்த என் அண்ணனுடன் வாழ்ந்து செத்துப் போவேன் என்று சொன்னதில் லாஜிக் இல்லை. போரில் ராவணனிடம் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீர்ந்து போகின்றன. அப்போது ராவணன் 'இன்று போய் நாளை வா' என்று சொல்கிறான். அதிலும் லாஜிக் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராமாயணத்தை மிஷ்கின் இழுவிப்படுத்திவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “ராமாயணத்தை இழிவாகப் பேசிய 'சைக்கோ' சினிமா இயக்குனர் மிஷ்கினின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தின் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சரியான எதிர்வினையாற்ற வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.