சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘ராயன்’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வரும் நாளை (26.07.2024) வெளியாகிறது. இப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கியுள்ளது. அதில் படம் வெளியாகும் முதல் நாள் மட்டும் 5 காட்சிகள் வீதம் காலை 9 மணிக்கு தொடங்கி மறுநாள், அதிகாலை 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘ராயன்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “என் அன்பான மற்றும் உண்மையான நண்பர் தனுஷுக்கு வாழ்த்துகள். உங்களின் 50வது படம் நாளை வெளியாகிறது. இது சிறந்த சாதனை. இப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணில் உருவான பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது. இருவரும் இணைந்து ‘பொல்லாதவன்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘மாறன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளனர். கடைசியாக இருவரது கூட்டணியில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசை ரசிகர்ளிடம் கவனம் பெற்றது.