தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராக புகார் மனு கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'செலிபிரேஷன் ஆஃப் லைஃப்' பின்னணி இசைக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் 3, 4 பின்னணி இசையைப் போட்டு முடித்துள்ளேன். சிறப்பான இசை விரைவில் உங்களுக்கு வரவுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டிருந்தஆயிரத்தில் ஒருவன் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் கேப்டன் மில்லர் படத்திற்கு நிறையபின்னணி இசையை கம்போஸ் செய்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.