இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி நீதி மன்றத்தில் முறையிட்டனர். மேலும் விசாரணையின் போது ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இருவரும் இன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இருவரும் பிரியும் நிலைப்பாட்டில் உறுதியக இருந்தால் அது பொருத்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உத்தரவின்படி இருவரும் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்களிடம் நிலைப்பாடு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இருவரும் பதிலளித்தனர். பின்பு குழந்தை தொடர்பான கேள்வியை நீதிபதி எழுப்பிய போது, குழந்தை சைந்தவியுடன் வளருவதற்கு எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் 30ஆம் தேதி சொல்வதாக கூறி அன்றைய தினம் வழக்கை ஒத்திவைத்தார்.