சென்னையைச் சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாகக் கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்தார். உயிரிழந்த பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரியாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் கேம் என்னை விட்டுப் போகாது, கம் பேக் குடுப்பேன், தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களைக் காப்பது நம் அனைவரின் கடமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.