
‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ், கன்னடம், இந்தி உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனிடையே கதாநாயகனாகவும் வலம் வருகிறார். இப்போது, இசையமைப்பாளராக விக்ரமின் தங்கலான், சிவகார்த்திகேயனின் அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். நடிகராக இடி முழக்கம், 13, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இவர் பாடகி சைந்தவியை 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதி இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் -சைந்தவி இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நீண்ட யோசனைக்குப் பிறகு, திருமணமான 11 வருடங்கள் கழித்து ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைப் பேணுவதன் மூலம் எங்களுடைய மன அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளனர்.