Skip to main content

ஜாக்கிசான் பட நாயகியுடன் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Published on 21/02/2018 | Edited on 22/02/2018
amyra


நடிகர் ஜி.வி.பிரகாஷ் க்கு நாச்சியார் படத்தின் மூலம் நல்ல வரவேற்பும், வாழ்த்துக்களும், கிடைத்திருப்பதினால் மிகுந்த புத்துணர்ச்சியுடன் காணப்படும் அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிசியாக நடித்து வருகிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் படமாக்கப்படுவதாகவும், இந்த படத்துக்கு 3டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிராகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் அனேகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அமைரா அதை தொடர்ந்து ஜாக்கி சானுடன் இணைந்து 'குங் பூ யோகா' படத்தில் நடித்தார். பின்னர் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கனும் படத்தில் நடித்து வருகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகராக பெருவெற்றி, தந்தையாக படுதோல்வி! - ஜாக்கி எனும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை  

Published on 07/04/2018 | Edited on 08/04/2018

ஏப்ரல் 7  -  ஜாக்கி சான் பிறந்த நாள் 
 

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஜாக்கி சான்தான்.1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பிக்கில் சார்லஸ் மற்றும் லீ லீ சான் தம்பதிக்கு பிறந்தார். இவரின் இயற்பெயர் சான் காங் சான் இவர் பிறக்கையில் 5400 கிராம் இருந்ததால் 'பாவ் பாவ்' என்று அழைத்தனர். அப்படியென்றால் பீரங்கி குண்டு என்று பொருள். உண்மையில் அவர் ஒரு பீரங்கிதான் சண்டை கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முகங்கள் கொண்டவர் ஜாக்கி சான்.

 

jackie chan



உலகில் வெற்றி பெற்ற பல ஜாம்பவான்கள், கல்வி என்று பார்க்கும்பொழுது அதில் அவர்கள் பெரியளவில் வெற்றிபெற்றதில்லை. அது போலத்தான் ஜாக்கியும். கல்வியில் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. அதனாலே அவரது ஆசிரியர்களிடம் அடிவாங்கியுள்ளார். குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஜாக்கியின் தந்தை சார்லஸ் சமையல்காரராக  ஆஸ்திரேலியாவில் உள்ள   அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுவிட்டார். 
 

ஜாக்கி தனது பெற்றோரை தொல்லை செய்ய கூடாது என்பதற்காக ஹோட்டலில் கூட பணிபுரிந்துள்ளார். ஜாக்கியின் திரைப்பயணம் உலகநாயகன்  கமலஹாசனை போல சிறுவயதிலே  தொடங்கியது. தனது 8 ஆவது வயதில் "லிட்டில் ஃபார்ச்சூன்ஸ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது 17 வயதில் புரூஸ்லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்டர் தி ட்ராகன் படங்களில் சண்டைக் கலைஞராக பணியாற்றினார். புரூஸ்லீயால் கவரப்பட்ட ஜாக்கி, தானும் ஒரு நடிகராக ஆசைப்பட்டார். 1971ஆம் ஆண்டு ஜாக்கி நினைத்தது போலவே அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சிறு வேடங்களில் நடித்தவர் 'லிட்டில் டைகர் ஆஃப்  காண்டூன்' திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இத்திரைப்படம்  1973 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் குறைந்த திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்டது. அதன் பின் ஒரு சில படங்களில் சிறுகதாபாத்திரம் மற்றும் சண்டைகலைஞராகவும் பணியாற்றினார்.
 

jackie chan



1976 ஆம் ஆண்டு வந்த ஒரு கடிதத்திற்கு பிறகுதான் அவரது வாழ்வில் ஒளி பிறக்கத் தொடங்கியது. ஹாங்காங் படத்தயாரிப்பாளர் வில்லி சானிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் லோ வேய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குனர், ஜாக்கி புரூஸ்லீக்கு ஒரு மாற்றாக இருப்பார் என்று  நினைத்தார். ஆனால் ஜாக்கிக்கு புருஸ்லீயின் தற்காப்பு கலை வரவில்லை. அதனாலேயே அந்த  திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
 

ஜாக்கியின் முதல் வெற்றியாக அமைந்தது 1978 ஆம் ஆண்டு வில்லி சானின் தயாரிப்பில் வெளிவந்த "ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ" திரைப்படம்தான். அது ஜாக்கியின் திரைப்பயணத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் யுயென் வூ-பிங். ஜாக்கியின் குங்க்பூ காட்சியில் நகைச்சுவையும் கலந்து நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் வில்லி சான் ஜாக்கியின் மேலாளர் ஆனார். ஜாக்கி 1980 ஆம் ஆண்டு உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருந்த ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். 'தி பிக் ப்ராவ்ல்', இது ஜாக்கியின் முதல் திரைப்படம் ஆகும். அதன் பின் 1981ஆம் ஆண்டு 'தி கேனன் பால் ரன்' திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வெற்றியைக் கொடுத்தது. ஆனால் 1986ஆம் ஆண்டு வெளியான 'தி ப்ரொடெக்டர்' வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. அதனால் மீண்டும் ஹாங்காங் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 

jackie with wife



1995ஆம் ஆண்டு மீண்டும் ஹாலிவுட் பக்கம் திரும்பினார் ஜாக்கி. "ரம்பிள் இன் தி ப்ரான்க்ஸ்" படம் ஜாக்கியை அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக பிரதிபலித்தது. அதன் பின் வெளியான போலீஸ் ஸ்டோரி 3, ரஷ் ஹவர் ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தன. ஜாக்கி சான் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெஃப் யேங்குடன் இணைந்து "ஐயம் ஜாக்கி சான்" என்ற புத்தகத்தை எழுதி 1999 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஜாக்கியின் இத்தனை வெற்றிக்கும் காரணம் தன் படங்களில் அவரே சண்டைக்காட்சிகளை அமைப்பதும், கடினமான சண்டைக்காட்சிகளில் தானே நடித்ததும் தான். ஜாக்கியின் உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
 

ஜாக்கிக்கு இந்திய சினிமாவின் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் இந்திய சினிமாவில் நுழைந்து ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. அந்த வகையில் இந்தியில் 'குங்க்பூ யோகா' என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. கமல் பத்து வேடத்தில் நடித்த  தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

 

jackie with his son jasie


ஜாக்கிக்கு கனவாக இருந்தது ஆஸ்கார் விருதுதான்.  25 ஆண்டுகளுக்கு  முன் ஒரு முறை சில்வஸ்டர் ஸ்டாலன் வீட்டிற்கு சென்ற ஜாக்கிக்கு அங்கு பார்த்த ஆஸ்கர் விருதை தான் ஒரு நாள் கையில் பிடிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்த ஆசை கடைசியில் 56 வருட சினிமா வாழ்விற்கும் 200 படங்கள் நடித்ததற்கும் 2016 ஆண்டு "வாழ்நாள் சாதனையாளர்" விருதாக கையில் வந்தது. ஜாக்கி நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட.  இவர் பல தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். 1988 ஆம் ஆண்டே ஜாக்கிசான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனையும் 2005 ஆம் ஆண்டு டிராகன்  ஆர்ட் பவுண்டேஷனையும் நிறுவினார். 
 

1982 ஆம் ஆண்டு  ஜாக்கிக்கும், தைவான்  நடிகை  ஜோன்  லின்க்கும்  திருமணம் நடைபெற்றது  இந்த  தம்பதிக்கு ஜேசீ சான் என்ற ஒரு  ஆண் குழந்தை பிறந்தது. இத்தனை உச்சங்கள் அடைந்த ஜாக்கி ஒருமுறை தனது மகனுக்காக சீன அரசிடம் பகீரங்க மன்னிப்பு கேட்டார். ஜாக்கியின் மகனும் நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜேசீ சான் போதை பொருள் வழக்கில் கைது செய்ப்பட்டார். அதன் பின் ஜாக்கி கூறியது " என் மகனை நான் சரியாக வளர்க்கவில்லை, வெட்கப்படுகிறேன்" என்றார். உண்மையில் ஜாக்கி சான் தன் தொழிலில் செலவு செய்த நேரத்தில் சிறு பகுதி கூட அவரது மகனுடன் செலவு செய்யவில்லை என்பது உண்மை. அவரும் அதை பல தருணங்களில் கூறியிருக்கிறார். ஒரு நடிகராக மிகப்பெரிய வெற்றி பெற்று உலகையே மகிழ்வித்த ஜாக்கி சான், ஒரு தந்தையாக தான் தோற்றுவிட்டதாக அவரே கூறியிருக்கிறார்.