தனுஷ் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இவருடன் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் பேனரில் இன்பன் உதயநிதி தமிழகத்தில் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பேசுகையில், ‘பொல்லாதவன் எனக்கு மூன்றாவது படம். அப்போது நான் சின்ன பையன், தனுஷ் என் கைபிடித்து இசை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. என் சகோதரர் மாதிரி, அவர் ஒருத்தரை நேசித்தால், அவரிடமிருந்து ‘நோ’ என்ற சொல்லே வராது. இட்லி கடை நம் மண் சார்ந்த கதையில் ஒரு அருமையான படமாக உருவாகியுள்ளது.
உங்கள் தந்தையை இந்த படம் பார்க்கும்போது நினைத்துப் பார்ப்பீர்கள். இந்த படமும் எங்கள் கூட்டணியில் வெற்றிப்படமாக இருக்கும். அருண் விஜய் சார், சத்யராஜ் சார், பார்த்திபன் சார் என அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். ஷாலினியும் நன்றாக நடித்துள்ளார். நித்யா மேனன் கலக்கியுள்ளார். டான் பிக்சர்ஸுக்கு நன்றி” என்றார்.