இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் கடந்த 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வெற்றிமாறன், அட்லீ உள்ளிட்ட திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கிரேஸ் ஆண்டனி பேசுகையில், “எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை வந்த போது என் அம்மாவிடம் கேட்டேன். சினிமா நமக்கு செட்டாகாது, நல்லா படிச்சு ஒரு வேலைக்கு போ-ன்னு சொல்லிவிட்டார். அப்புறம் எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும்... அதுல நான் டீச்சராகப் போறேன்னு சொல்லி டான்ஸ் கோர்ஸ் படிச்சேன்.
ஒரு சமயத்துல படிப்ப விட கலையில தான் எனக்கு ஆர்வம் அதிகம், அதுல தான் நான் எதாவது சாதிக்கனும்னு எனக்கு புரிஞ்சி போச்சு. அப்புறம் ஒரு வயசுல நடிகை தான் ஆகனும்னு முடிவெடுத்தேன். தமிழில் ராம் சார் படம் மூலமா அறிமுகமாகுறதுல ரொம்ப சந்தோஷம். எமோஷ்னலாவும் இருக்கேன். இந்த சமயத்துல அம்மாவ மிஸ் பன்றேன். அவங்க வீட்டுல இருக்காங்க” என்று பேசிக்கொண்டிருந்தவர் எமோஷ்னலாகி கண்கலங்கிவிட்டார். பின்பு அப்படியே பேசிய அவர், “முதலில் நிவின் பாலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் எனக்கு இந்த படம் பற்றி சொன்னார். எனக்கு என்னை நினைத்தே ரொம்ப பெருமையா இருக்கு. கும்பலாங்கி நைட்ஸ் 100வதுநாள் கொண்டாட்ட நிகழ்வு எப்படி எமோஷ்னலா இருந்துச்சோ அது மாதிரி தான் இப்போ இருக்கு” என்றார்.